கல்வியை காவியமயமாக்குவதுதான் தேசிய கல்விக் கொள்கை.. முதலமைச்சர் ஆவேசம்!!

கல்வியை காவியமயமாக்க கொண்டு வரப்பட்டதுதான் தேசிய கல்விக் கொள்கை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ என்னும் புத்தக வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் திக் விஜய் சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபாலகவுடா, முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பள்ளிக்கல்வித்துறை சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்டங்களும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. 234 தொகுதிகளிலும் பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ்.
ஆண்டுதோறும் பொதுத் தேர்வு முடிவு தேர்ச்சி விகிதங்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமாக இந்த ஆட்சியை மாற்றி உள்ளார். துணிச்சலோடு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் அன்பில் மகேஸ். ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி கொள்கையை விட்டு தர மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டினை நாசப்படுத்திட புதியக் கல்வி கொள்கையை கொண்டு வந்தது ஒன்றிய அரசு.
கல்வியை காவியமயமாக்க கொண்டு வரப்பட்டதுதான் தேசிய கல்விக் கொள்கை. எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னால் அது திராவிட மாடல். இன்னார்தான் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதுதான் பாஜக,” என்று கூறினார்.