எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் மோகம்.. வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து குதித்த இளைஞர்!

 
Madurai

வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து, அந்த நெருப்பு வழியாக ஆற்றுக்குள் குதிப்பது போல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இப்படி எடுப்பதால் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிகிறது. மேலும் பல சர்ச்சைகளும் எழுந்து வருகிறது.

Vaigai

இந்த நிலையில், மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

From around the web