காதல் மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்... தேனியில் பகீர் சம்பவம்!

 
THeni

தேனி அருகே காதல் மனைவியை கொலை செய்து விட்டு கணவன் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் (38). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றியபோது அவருடன் வேலை செய்த அரவக்குறிச்சியை சேர்ந்த சைபுதீன் - பாத்திமா தம்பதியரின் மகளான ரம்ஜான் (36) என்பவரை காதலித்துள்ளார். அதன்பின் ரம்ஜானை திருமணம் செய்து கொண்ட வடிவேல் தனது பெயரை முகமது அபூபக்கர் சித்திக்காக மாற்றிக்கொண்டார்.

தம்பதியினர் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் உள்ள வி.ஆர்.பி.நாயுடு தெருவில் கடந்த சில வருடங்களாக வசித்து வந்தனர். மேலும் அதே பகுதியில் முகமது அபூபக்கர் சித்திக் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் கடந்த 27-ம் தேதி பெரியகுளத்தில் உள்ள உறவினர் இல்ல நிகழ்வுக்கு முகமது அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது 2 பிள்ளைகள் மட்டும் சென்று வந்துள்ளனர்.

Murder

மேலும் உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்த ரம்ஜான், சிறிது நேரத்தில் பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கிய நிலையில் கிடந்துள்ளார். தாயின் நிலையை கண்ட பிள்ளைகள் அவரது தந்தையிடம் கேட்க பதில் ஏதும் சொல்லாமல் அவர் வெளியே  சென்றுள்ளார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் வந்து பார்த்தபோது ரம்ஜான் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு மனைவியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை அபூபக்கர் சித்திக் செய்துள்ளார்.

இதனிடையே தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ரம்ஜானின் தாயார் பாத்திமா பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரம்ஜானின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக ரம்ஜானின் கணவர் முகமது அபூபக்கர் சித்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் உயிரிழந்த ரம்ஜான் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்ததாகவும், அதன் காரணமாகத் தான் உயிரிழந்தார் என முன்னுக்கு பின் முரணாக முகமது அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரம்ஜானின் கழுத்து நெரிக்கப்பட்டதால் உண்டான மூச்சுத்திணறல் காரணமாக தான் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Periyakulam PS

இதையடுத்து போலீசார் முகமது அபூபக்கர் சித்திக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் பெண்கள் சிலருடன் முகமது அபூபக்கர் சித்திக்கிற்கு தொடர்பு இருந்துள்ளது. இதனை ரம்ஜான் கண்டித்துள்ளார். இதன் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சம்பவத்தன்று உறவினர் இல்ல நிகழ்வுக்கு சென்று வந்தபோது ரம்ஜானுடன் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த முகமது அபூபக்கர் சித்திக் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் குழந்தைகளிடம் நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றம் செய்த பெரியகுளம் போலீசார் முகமது அபூபக்கர் சித்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web