பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. ஊசலாடிய 40 பயணிகள் உயிர்!

 
Sethiyathope

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் சிக்கிய அரசுப் பேருந்து அந்தரத்தில் தொங்கியதை அடுத்து, கண்ணாடியை உடைத்து, உள்ளிருந்த பயணிகளை பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்தை சேர்ந்த வீரமணி (54) என்பவர் ஓட்டினார். சுமார் 40 பயணிகள் அதில் பயணம் செய்தனர்.

Sethiyathope

இந்த நிலையில் பேருந்து நள்ளிரவு 12.30 மணி அளவில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. 

இதனால் பேருந்து சுவரை உடைத்துக்கொண்டு சென்று, முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

Sethiyathope PS

பேருந்து அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. பயணிகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள், உடனடியாக சென்று பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் மீட்பு வாகனம் கொண்டு, அந்தரத்தில் தொங்கிய பேருந்தை மீட்டனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web