பிரபல சேமியா பாக்கெட்டில் கிடந்த தவளை.. அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்.. வைரல் வீடியோ!

தேவகோட்டை மளிகை கடை ஒன்றில் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இருந்த இறந்து காய்ந்து போன தவளை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காடேரி அம்மன் நகரில் வசித்து வருபவர் பூமிநாதன் (37). இவர் தேவகோட்டை ராம்நகரில் உணவகம் நடத்தி வருகிறார். தீபாவளி உணவு தயாரிப்பதற்காக தனது கடை அருகில் உள்ள ஆனந்தம் மளிகை கடையில் பிரபல உணவு பொருள் தயாரிப்பு நிறுவனமான அணில் மார்க் கம்பெனி தயாரித்த சேமியா பாக்கெட் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில், பாயாசம் செய்வதற்காக சேமியா பாக்கெட்டை பிரித்த போது, அந்த பாக்கெட்டுக்குள் இறந்த நீண்ட நாளான தவளை காய்ந்து போன நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார்.
பிரபல கம்பெனி பேக்கிங் செய்து கொடுத்த சேமியாவை தான் வாங்கி விற்பனை செய்தேன் என கூறியதை அடுத்து தமிழ்நாடு மொத்த விற்பனை மேலாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது தவறுகளுக்கு மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
பிரபல கம்பெனி என்பதால் நம்பிக்கையுடன் வாங்கி விற்பனை செய்தது தவறுதான் என்று வருந்தி உள்ளார். எது எப்படி இருந்தாலும், சிறிய கம்பெனிகள் மட்டுமே பாதிக்கப்படும் நிலையில் பெரிய கம்பெனிகளின் தவறுகள் மறைக்கப்படுவதாகவும் புகார்கள் இருந்துள்ளது.
பொதுமக்களின் சுகாதாரம் காக்க உணவு பாதுகாப்புத் துறையினர் விழித்துக் கொண்டு குறைந்த அளவு பாதுகாப்பையாவது உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.