மாநில உரிமையை மீட்பதே முதல் வாக்குறுதியாம்! எடப்பாடி பழனிசாமியின் காமெடி!!

உதய் மின் திட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமையை மீட்பதே தன்னுடைய முதல் வாக்குறுதி என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாட்டு உரிமைகள் பலவும் ஒன்றிய அரசு வசம் சென்றதை அனைவரும் அறிவார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை அனைத்தையும் மீட்பேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஏளனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் போலீஸ் விசாரணை கைதிகள் கொடூரமான மரணம், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் என நாலா பக்கமும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்கள் நடந்தது. மாநிலத்தின் வளம் குன்றிப்போய் அனைத்து துறையிலும் பின் தங்கியது. மாநில உரிமையை விட்டுக் கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்.
இப்போது கூட ரெய்டுகளைக் காட்டி மிரட்டியே கூட்டணிக்கு பணிய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல கார்கள் மாறிச் சென்று அமித்ஷாவை டெல்லியில் சந்தித்த நிகழ்வே இதைச் சுட்டிக்காட்டுகிறது.
இப்படிப்பட்டவர் தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை அனைத்தையும் மீட்பேன் என்று சொன்னால் சிரிப்பு தானே வரும். மக்களுக்கு மறதி இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் சமூகத்தள உலகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததைக்கூட உடனடியாக நினைவு படுத்தி விடும் ஆற்றல் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார் போலும்.
-ஸ்கார்ப்பியன்