இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்!

 
MS Swaminathan

பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 98.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன். பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் அவர், 1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து 1982 முதல் 1988 வரை சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராக பதவி வகித்துள்ளார்.

கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.

MS Swaminathan

வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவு உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறவைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் 90 வயதிலும் தனது ஆராய்ச்சி அறக்கட்டளைப் பணிகளை சுறுசுறுப்புடன் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவினால் காலமானார். அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலருமான மீனா சுவாமிநாதன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார். எம்.எஸ்.சுவாமிநாதன் மீனா சுவாமிநாதன் தம்பதியினருக்கு சௌமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யாராவ் ஆகிய 3 மகள்கள், 5 பேரக் குழந்தைகள் உள்ளனர். எம்எஸ் சுவாமிநாதன் மறைவுக்கு விஞ்ஞானிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இவரது மறைவுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல்  தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுணையான பணி மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது மற்றும் நமது நாட்டிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது என்று பதிவிட்டுள்ளார்.

From around the web