உயிர்ப்பலிக்கு காரணமானவர்கள் குடும்பம் விளங்காது! செல்லூர் ராஜுவின் சாபம் பலிக்குமா?

 
Sellur-Raju Sellur-Raju

கரூர் துயரச் சம்பவத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டு வராத நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் கரூர் சம்பவம் அரசியல் பேசு பொருளாகிவிட்டது. இது குறித்து விஜய் தரப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஒவ்வொரு நிமிடமும் யாராவது எதையாவது சொல்லிக்கொண்டோ, எழுதிக் கொண்டோ, வீடியோ வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த வகையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கரூர் சம்பவத்தை மதுரையில் ஜெயலலிதா வந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.

“விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார், அரசியலில் புதுமுகம். அவரை ரொம்பவும் எல்லோரும் விமர்சனம் பண்ணியாச்சு. 2010-ல் மதுரை பாண்டிக்கோயிலில் ஒரு அதிமுக கூட்டம் நடந்தது. இரண்டரை லட்சம் மக்கள் திரண்டார்கள். சாலை முழுக்க மக்கள் கூட்டம். அதில் ஜெயலலிதா விமான நிலையத்திலிருந்து மாநாட்டு திடலுக்கு வரவே இரண்டரை மணிநேரம் ஆனது. அப்போதெல்லாம் கட்டுக்கோப்பாக நடத்தினோம். ஆனால், கரூரில் 25 ஆயிரம் பேர்தான் வந்துள்ளார்கள். அதில் இதுபோல நடந்தது மன உளைச்சலை தருகிறது.

இனி தவெக தலைவரும் மாவட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மக்களை சந்திக்காமல், தொகுதிவாரியாக சென்று சந்திக்கலாம். அல்லது பொதுவான ஒரு திடலில் கூட்டம் போடலாம். விஜய் வீடியோவில் தனது ஆதங்கத்தை சொல்லியுள்ளார். இந்த மாதிரி உயிர் பலி ஏற்பட காரணமானவர் யாராக இருந்தாலும், அவரின் குடும்பமே விளங்காது. தவெக கூட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது. காவல் துறையும் வேறு இடத்தை கொடுத்திருக்கலாம்” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்

From around the web