தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரயில், பேருந்து என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. அதற்கு மறுநாளான வெள்ளிக்கிழமை பணி நாளாகும். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் தீபாவளி அன்றே கிளம்ப வேண்டியிருந்தது.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை அறிவித்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப முடியும் என்பதால், வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01-11-2024 அன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள். பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.