தந்தையை கடத்திய அன்பு மகள்.. நாய் போல் கட்டி வைத்து சித்ரவதை செய்த கொடூரம்!

 
Karaikudi

காரைக்குடியில் தந்தையை சொத்துக்காக பெற்ற மகளே கடத்தி கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புது சந்தைபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவரது மனைவி கல்யாணி. சௌந்தரராஜன் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வந்துள்ளார். கல்யாணி பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ராஜி என்ற ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்துள்ளது.

ராஜி ஒரே பிள்ளை என்பதால் தாய் தந்தை இருவரும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். அவரை நன்கு படிக்க வைத்து 2008-ம் ஆண்டு ராணுவத்தில் பணிபுரிந்து வரும் சக்கரவர்த்தி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சௌந்தரராஜன் மகள் ராஜி காரைக்குடியில் உள்ள நகராட்சி உயர்நிலைப பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

Kidnapped

இந்த நிலையில், சௌந்தரராஜனின் மனைவி கல்யாணி 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின் தனிமையில் வாழ்ந்து வந்த சௌந்தரராஜனுக்கு தற்போது 73 வயதாகிறது. அவர் தனியாக தனது வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சொத்துக்களை விற்று தந்தை ஊதாரித்தனமாக செலவு செய்து வருகிறார் என்று ராஜிக்கு யாரோ தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜி தனது கணவர் சக்கரவர்த்தி அவரது தம்பி பல்லவன், மாமனார் ராஜேஸ்வரன் ஆகியோரை அழைத்துக் கொண்டு காரைக்குடிக்கு சென்றுள்ளார். அங்கு தனது தந்தை சௌந்தரராஜனின் கை, கால்களை கட்டி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை பிளாஸ்டர் போட்டு ஒட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

Police

இதனைத்தொடர்ந்து காரைக்குடி அருகில் பள்ளத்தூரில் உள்ள வீட்டிற்கு கடத்தி சென்று தனி அறையில் சங்கிலியால் நாய் போல கட்டி போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து சங்கிலியால் கட்டிப் போட்டதால் கையில் காயம் ஏற்படவே சங்கிலியை அவிழ்த்து விட்டுள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட சௌந்தரராஜன் கடந்த டிசம்பர் 23-ம் தேதி இரவு யாருக்கும் தெரியாமல் தப்பி காரைக்குடியில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது எதார்த்தமாக பார்த்த அவரது நண்பர் வீரசேகரனிடம் சௌந்தரராஜனின் நடந்ததைக் கூற அவர் அதிர்ந்துபோனார். உடனடியாக இதுகுறித்து வீர சேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சௌந்தரராஜனின் மகள் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரித்து வந்தனர். பெற்ற தந்தையையே உறவினர்களுடன் சேர்ந்து மகள் சொத்துக்காக துன்புறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மகள் ராஜி மருமகன் சக்கரவர்த்தி உறவினர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

From around the web