3 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த ஜோடி.. வீடு புகுந்து வெட்டிக்கொலை.. தூத்துக்குடியில் பயங்கரம்!

 
Thoothukudi

தூத்துக்குடியில்காதல் திருமணம் செய்த ஜோடி, வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிசெல்வம் (24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இவர்களது காதலுக்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி மாரிசெல்வம், கார்த்திகாவை அழைத்துச் சென்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதன்பிறகு கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், தொடர்ந்து புதுமண தம்பதிகள் 2 பேரும் கோவில்பட்டியிலேயே தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Murder

பின்னர் திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு இன்று காலையில் காதல் தம்பதியினர் முருகேசன் நகரில் உள்ள மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்து உள்ளனர். இதனையறிந்து மாரிசெல்வத்தின் வீட்டுக்கு இன்று மாலை வந்த மர்ம நபர்கள், மாரிச்செல்வம் - கார்த்திகா ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா, அல்லது வேறு யாரேனும் கொலை செய்து உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

Sipcot PS thoothukudi

இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், ஆட்களை வைத்து இருவரையும் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. முத்துராமலிங்கத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில், மூத்த மகளான கார்த்திகா, பொருளாதார வசதி குறைவான மாரிச் செல்வத்தை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததால், இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

குற்றசெயலில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். காதல் ஜோடி திருமணமான மூன்று நாளில் பெண் வீட்டாரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க எவ்வளவு சட்டம் இயற்றினாலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் அடிக்கடி சாதிய குற்றங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web