கடிவாளம் போட்ட முதலமைச்சர்.. இனி பல்கலைக் கழகத்திற்குள் செல்வாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

தமிழ்நாடு பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர் நியமனம் தொடர்பான 10 மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி யை கண்டித்து, மசோதக்களுக்கு ஒப்புதல் அளித்தது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பத்து மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் நேற்றிரவே வெளியிடப்பட்டது. இதன் படி இன்று முதல் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேந்தர் ஆகி உள்ளார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, நிரப்பப்படாத பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பொறுப்புக்கு உடனடியான நியமனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தடுத்து அறிவிக்க உள்ளார். மேலும் பாஜக சார்பு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த துணைவேந்தர்களும் அதிரடியாக மாற்றப்பட உள்ளனர்.
இது நாள் வரையிலும் பல்கலைக்கழகங்களுக்குள் அடிக்கடி சென்று, அங்கே பாஜக சித்தாந்தங்களை மாணவர்கள் மத்தியில் பரப்பி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பல்கலைக் கழகங்களில் எந்தப் பொறுப்பும் கிடையாது. பல்கலைக் கழகங்கள் தொடர்பான எந்தவித முடிவுகளும் அவரால் எடுக்க முடியாது.
புதிய வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது புதிய துணைவேந்தர்கள் அழைப்பு விடுத்தால் ஒழிய பல்கலைக் கழக வளாகத்திற்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு சாதாரண மனிதராக மட்டுமே செல்ல முடியும். சர்வவல்லமை கொண்ட அதிகாரமிக்க வேந்தராக தமிழ்நாடு முழுவதும் வலம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரே நாளில் பல்கலைக் கழகங்களிலிருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.