ஒரே நேரத்தில் 3 பேரின் உயிரை பறித்த செல்போன்.. சென்னை அருகே பயங்கரம்!!

கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் 3 இலங்கை தமிழர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர்கள், தயாளன், சார்லஸ் மற்றும் ஜான். இவர்கள் மூன்று பேரும் பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி செல்லவே, ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். லாரி வளைவில் அவர்கள் முந்திய போது, விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் சிதறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், இளைஞர்களின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர்கள் மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த தயாளன் (19), சார்லஸ் (21), ஜான் (20) என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.