லாரி மோதியதில் அப்பளம் போல நொறுங்கிய கார்.. 8 பேர் பலி.. செங்கம் அருகே சோகம்!!

செங்கம் அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தணூர் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் எதிர்புறத்தில் திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்த கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியும் - காரும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தைப் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு போலீசாருடன் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
ஆனால், அந்த காரில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 2 சிறுவர்கள் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விபத்தில் பலியான 7 பேரின் உடலையும் மீட்ட போலீசார், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் செங்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்டிருப்பதால் அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்து நிகழ்ந்ததும் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.