மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.. தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

 
Election

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 18-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணியில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையிலான அணியில் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

Election

பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.

4 முனை போட்டி நிலவும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 9 முறை தமிழ்நாடு வந்து பாஜக அணிக்காக பிரசாரம் செய்துள்ளார். அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் முற்றுகையிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 முறை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்தார்.

MKS

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web