வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து.. கீழே விழுந்து இளம்பெண் பலி.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

நாமக்கலில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகள் கௌசல்யா (20). ப்ளஸ் 2 வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தினமும் பேருந்தில் பணிக்கு சென்று திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு கார்மெண்ட்ஸ் நிறுவன பணிக்கு சென்று விட்டு மாலை பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் பயணித்தார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தங்கையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவர் நின்றபடி பயணித்தார்.
அப்போது சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திர திரையரங்கு வளைவில் பேருந்து திரும்பிய போது படியின் ஓரம் நின்றிருந்த கௌசல்யா, பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி, தவறி கீழே விழுந்தார். அதில் சாலையோரம் இருந்த கல்லில் கௌசல்யாவின் தலை மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கௌசல்யாவின் உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சேலம்:ஆட்டையாம்பட்டி அருகே பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த இளம்பெண்ணின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் pic.twitter.com/IWQN5iFtMD
— Tamil Diary (@TamildiaryIn) May 4, 2023
கௌசல்யா தனியார் பேருந்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனியார் பேருந்தில் இருந்து இளம்பெண் கௌசல்யா கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.