புறாக்களுடன் விளையாடிய சிறுவன்.. 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி..!
சென்னையில் 10-ம் வகுப்பு மாணவர் புறாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரது மகன் ஜாக் (16). இவர், பரங்கிமலை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். புறா வளர்ப்பின் மீது ஆர்வம் கொண்ட சிறுவன் ஜாக், தன் வீட்டின் மொட்டை மாடியில் ஏராளமான புறாக்களை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்தன்று புறாக்களுடன் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஜாக், புறாக்களை பிடிக்க முயன்று எதிர்பாராத விதமாக 4-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இருக்கிறார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை தூக்கிக் கொண்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த கண்ணகி நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.