காருக்கு அடியில் சிக்கிய சிறுவன்.. தீயில் உடல் கருகி பலி.. குமரியில் கொடூர விபத்து!
பைக் மீது கார் மோதிய விபத்தில் காரின் அடியில் சிக்கிய பள்ளி மாணவன் நெடுந்தூரம் இழுத்து செல்லப்பட்டு தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி தெற்குபால் கிணற்றான் விளையை சேர்ந்த கோபி (39). இவர், ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று (ஞாயிற்றுகிழமை) விடுமுறை என்பதால் மனைவி லேகா (30) மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு மாலை நேரத்தில் வீட்டிலிருந்து சங்குதுறைபீச்சு அழைத்து சென்றுள்ளார்.
ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்த போது காரின் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காரின் முன் பகுதியில் பைக்கும், அதை ஓட்டி வந்த சிறுவனும் சிக்கிக் கொண்டனர். காரின் முன்பகுதியில் சிறுவனும், பைக்கும் சிக்கியிருப்பதை அறியாத கோபி காரை வேகமாக இயக்கியுள்ளார்.
இதனை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டனர். மேலும் இளைஞர்கள் காரை நிறுத்துமாறு பைக்கில் வேகமாக பின்தொடர்ந்தனர். ஆனால் அதற்குள் கார் சங்குத்துறை கடற்கரை சாலைக்கு வந்து விட, காரின் முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்ததுள்ளது. இதனால் பதறிய கோபி மற்றும் அவரது மனைவி, குழந்தைகள் காரில் இருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவ, காருடன் சிக்கிய பைக்கும், அதிலிருந்த சிறுவனும் சேர்ந்து தீயில் எரிந்தனர். தகவல் அறிந்து நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். மேலும் காரின் முன் பகுதியில் உடல் சிக்கியிருந்த நிலையில் கார் தீ பிடித்ததால் சிறுவன் உடல் முழுவதும் கருகி விட்டது. பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்த சிறுவன் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
15 வயது சிறுவன் கார் மோதி சாலையில் தரதர என இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான சிறுவன் தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் என்பதும், சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் காரை ஓட்டி வந்த கோபியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.