சிறுவன் இயந்திரத்தில் சிக்கி பலி.. வாணியம்பாடி அருகே சோகம்!

 
Vaniyambadi

வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமாக ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில் அண்டை கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

Vaniyambadi

இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் காலை 10 மணி அளவில் பணிகள் தொடங்கியது. தொழிற்சாலையில் பணிபுரியும் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் மகன் மோகன் (17) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஊதுபத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

சிறுவன் மோகன் நிலக்கரி அரைக்கும் இயந்திரம் அருகே பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது. கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Vaniyambadi Taluk PS

அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்த வந்த வாணியம்பாடி தாலுக்கா போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web