300 அடியில் சடலம்.. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் பார்த்து விபரீதத்தில் இறங்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
குன்னூர் அருகே மலை பள்ளத்தில் 300 அடிக்கும் கீழ் இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (26). இவர் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் தொழில்நுட்ப இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் தர்மபுரி, சேலம், மதுரை, பெங்களூரு, நீலகிரி உள்ளிட்ட பகுதி ஐடியில் பணிபுரியும் இன்ஜினியர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்களாக உள்ளனர்.
இவர்கள் 10 பேர் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கொலக்கம்பை செங்குட்டுவராயன் மலைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட பாணியில் 10 இளைஞர்களும், தடை செய்யப்பட்ட மலை ஏற்றத்திற்குள் நுழைந்து டிரெக்கிங் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது மலையில் இருந்த தேனீக்கள் கூடு கலைந்ததாகவும், இதனால் இளைஞர்கள் சிதறி ஓடியதாகவும் கூறப்படும் நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு 7 இளைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது, பிரவீன் குமார் உள்பட 3 பேர் காணாமல் போனதை அறிந்த மற்ற இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தர்ஷத் என்பவர் அடிவாரம் வந்து தகவல் தெரிவித்தார். படுகாயம் அடைந்த வினோத் குமார் (29), குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாயமான பிரவீன் குமாரை போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தேடினர். நேற்று காலை மீண்டும் ட்ரோன் வாயிலாக மலைப்பகுதிகளில் தேடினர்.
அப்போது, மலையில் உள்ள பள்ளம் ஒன்றில் 300 அடிக்கும் கீழ் இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.