பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த பைக்.. 2 இளைஞர்கள் பரிதாப பலி!
நத்தம்பட்டி அருகே பைக் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நத்தம்பட்டி அருகே அர்ஜூனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலப் பணிக்காக வந்த தொழிலாளர்கள், பள்ளத்தில் 2 பேர் பைக்குடன் இறந்து கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம்பட்டி போலீசார், 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், உயிரிழந்த இருவரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெயபிரகாஷ் (20), தர்மராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (19) எனத் தெரிய வந்தது. இவ்விருவரும் சிவகாசியில் உள்ள உறவினர்வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து பைக்கில் புறப்பட்டுள்ளனர்.
அப்போது நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிக்காக தோண்டியபள்ளத்தில் பைக் கவிழ்த்து விபத்து ஏற்பட்டுள்ளது என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.