லோடுவேன் மீது மோதி நொறுங்கிய பைக்.. 3 சிறுவர்கள் துடிதுடித்து பலி!

நாகப்படினம் அருகே சரக்கு வாகனம் - இருசக்கர வாகனம் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்து உள்ள கூத்தூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவரது மகன் ரிஷ்வான் (17). திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அப்துல் முகமது மகன் பாசித் (17). கீழ்வேளூரில் ஐடிஐ படித்து வந்தார். கூத்தூர் புதுத்தெருவை சேர்ந்த பாவா பக்ருதின் மகன் நவ்புல் (17). திருவாரூரில் உள்ள கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தார்.
நண்பர்களான மூவரும், நவ்புல்லுக்கு சொந்தமான பைக்கில் நேற்றிரவு கீழ்வேளூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கூத்தூருக்கு பைக்கில் வந்தனர். பைக்கை நவ்புல் ஓட்டி வந்தார். இரவு 9 மணியளவில் குருக்கத்தி பெட்ரோல் பங்கு அருகே சென்றபோது திருச்சியில் இருந்து குளிர்பானம் ஏற்றி வந்த லோடு வேன், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரிஷ்வான், பாசித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நவ்புல் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோடுவேன் ஓட்டுநரான சக்திவேல் (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரில் நண்பர்களான 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.