அரசு பள்ளியில் மேஜை, நாற்காலியை அடித்து உடைத்த அட்டூழியம்... மாணவ மாணவிகள் 5 பேர் சஸ்பெண்ட்...!
Thu, 9 Mar 2023

தர்மபுரி அருகே அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசை, நாற்காலிகளை மாணவ, மாணவியர் உடைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.
மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ - மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ - மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவ - மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கல்வி மாவட்டம் அம்மாணி மல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (7.3.2023) நடந்த சம்பவமாம்@DinamaniDaily
— 2024 is our MISSION (@esanindia1965) March 8, 2023
இன்றைய மாணவ சமுதாயம் எங்கே செல்கிறது,எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லையே!?@Nakkal_News
ஊடகங்கள் இவற்றை விவாதிக்குமா!? pic.twitter.com/Dm6USVSHfl
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் வகுப்பறை பொருட்கள் சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை, 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.