சட்டமன்றம் கூடுகிறது! ஆளுநர் உரையில் சம்பவம் இருக்குமா?
2025ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஜனவரி 6ம் தேதி, திங்கட்கிழமை கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும்.
காலை 9.20 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை முதன்மைச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டசபை கூட்ட அரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள்.
காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும். ஆளுநர் உரை சுமார் 45 நிமிடங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. அதனைத்தொடர்ந்து, அவரது உரையை தமிழில் சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் இன்றையக் கூட்டம் நிறைவுபெறும்.
பின்னர் ச்பாநாயகர் அறையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் சில வாக்கியங்களை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் ஆர்.என்.ரவி பேசியதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதை நிராகரித்து முழு உரையை அவைக்குறிப்பில் இடம்பெறுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார். ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தின் இடையிலேயே எழுந்து சென்றார்.
இன்றைய ஆளுநர் உரையிலும் அத்தகைய குழப்பம் ஏதாவது நிகழுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.