ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்.. அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் தளவாய் சுந்தரம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாத நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு தமிழ்நாடு அரசின் டில்லி பிரதிநிதி என்ற பொறுப்பை பழனிசாமி வழங்கி அழகு பார்த்திருந்தார்.
இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்தில் 2 இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டத்தில் ஈசாந்திமங்கலத்தில் நடைப்பெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினரான தளவாய் சுந்தரம் கொடி அசைத்து தொடங்கி வைத்திருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/G5TlliCgoe
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) October 8, 2024
இந்நிலையில், அதிமுக கொள்கை, குறிக்கோள், கோட்பாடு மற்றும் கழகத்தின் சட்ட திட்ட விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டார் என்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள இருப்பதால், அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.