பதற்றம்.. ஈரோடு கிழக்கில் திமுக - அதிமுகவினர் திடீர் மோதல்.. ராணுவம் குவிப்பு!

 
Erode

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக கட்சியின் தென்னரசு, தேமுதிக கட்சியின் எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா, சுயேட்சைகள் என 77 வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தான் இன்று காலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர். இந்த வேளையில் பெரியார் நகர் பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த வாக்குச்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுகவினரும், தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினரும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.

Erode

இருகட்சியினரும் எதிரெதிரே அமர்ந்து பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். இந்த வேளையில் இருகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. அதாவது திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க திமுக முயற்சிக்கிறது. இதனால் அதிமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என அக்கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்து கூறினர். 

மாறாக, அதிமுக முந்தைய ஆட்சியில் நிறைய கடன் வாங்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அதிமுகவை புறக்கணித்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என திமுகவினர் வாக்கு சேகரித்தனர். 

Border force

இந்த வேளையில் தான் இருகட்சியினருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சாதியை சொல்லி பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் முற்றி மோதல் உருவானது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதையடுத்து போலீசார் வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே அமர்ந்துள்ள திமுகவினர், அதிமுகவினருக்கு மாற்று இடம் ஒதுக்கினர். தற்போது புதிய இடத்தில் அவர்கள் அமர்ந்து பொதுமக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். மேலும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

From around the web