குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னையில் வீட்டுவாசலில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு படுகொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் 41வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவரும் மீன் கடையில் வேலை செய்து வந்தனர். தான் வசித்துவந்த குடியிருப்பில் உள்ள 3வது மாடியின் வீட்டுவாசலில் நேற்று இரவு கலைவாணன் குடிபோதையில் தூங்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில், இரவு 11.50 மணி அளவில் தலை நசுங்கி கலைவாணன் கொடூரமாக இறந்துகிடந்தது பார்த்ததும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரும்பாக்கம் போலீசார், கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கலைவாணன் மனைவி கொடுத்த புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 3 மாதத்துக்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டபோது கலைவாணனை அசிங்கமாக பேசியுள்ளார் என்று தெரிந்தது.
இதையடுத்து சரளாவின் மகன் வசந்த் (21), உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் என்கிற வெள்ளை சந்தோஷ், அருண் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர். கலைவாணன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கஞ்சா விற்பது பற்றியும் போலீசாருக்கு கலைவாணன் தகவல் கொடுத்துவந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த பிரச்னை காரணமாக கொலை நடந்துள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.