100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்.. 3 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு!
கொடைக்கானல் டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் பல்வேறு இடங்களைப் பார்த்துவிட்டு இன்று டால்பின் நோஸ் பகுதியை பார்வையிட வந்தனர்.
அங்கு அந்த இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, அவர்களில் தன்ராஜ் என்ற இளைஞர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து அவருடன் வந்த இளைஞர்கள் அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தன்ராஜை உயிருடன் மீட்டனர். கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்கள் மற்றும் தலையில் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்லாமல் கவனமாக சுற்றி பார்க்குமாறு வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் அறிவுறுத்தியுள்ளனர்.