போதை ஊசியால் இளைஞர் பலி.. அடுத்தடுத்த உயிரிழப்புகளால் அதிர்ச்சியில் தலைநகரம்!
சென்னையில் போதை ஊசியால் 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் வசித்து வந்தவர் கோகுல் என்ற கருப்பு கோகுல் (22). கடந்த 2 ஆண்டுகளாக போதைக்கு அடிமையான இவர் நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசிகளைப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கோகுல் நண்பர்களுடன் சேர்ந்து தட்டாங்குளம் விளையாட்டு மைதானம் அருகே போதை ஊசியை பயன்படுத்தியுள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த கோகுலை அவருடைய நண்பர்கள் மீட்டு அவரது வீட்டிற்குக் கொண்டு சென்றனர். பின்னர் அவரது தாயிடம், கோகுல் தட்டான்குளம் பொதுக் கழிவறையில் கீழே விழுந்து மயக்கமடைந்தாக கூறிவிட்டு ஓடி விட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரது தாய், கோகுலை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கோகுல் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் சமீப நாட்களாக போதை ஊசியால் இளைஞர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இதே புளியந்தோப்பு பகுதியில் சதீஷ் (22) என்ற இளைஞரும், அதே மாதம் ராகுல் (19) என்ற இளைஞரும் போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த சோகம் அரங்கேறியது. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் இம்ரான், ஜூன் மாதம் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கணேசன் (24) போதை ஊசிக்கு அடிமையாகி உயிரிழந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த தீபக் (23), அக்டோபர் மாதம் புளியந்தோப்பு பகுதியில் சஞ்சய் (18) என்பவரும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.