மின்சாரம் தாக்கி பள்ளி ஆசிரியர் பலி.. திருத்தணி அருகே சோகம்!

 
Thiruttani
திருத்தணி அருகே விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்க்க சென்ற பள்ளி ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் காலனியை சேர்ந்தவர் சபரிமலை (47). இவர் கே.ஜி.கண்டிகையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக அதே கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.
shock
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற சபரிமலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி உமாமகேஸ்வரி விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது மின்மோட்டாருக்கு செல்லும் ஒயரில் சபரிமலை கால் சிக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
பின்னர் உறவினர்கள் உதவியுடன் அவரது உடலை மீட்டு வீட்டிற்கு எடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி, சபரிமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
Thiruttani
மேலும் சபரிமலையின் மனைவி உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சபரிமலை விவசாய நிலத்திற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக மின் ஒயரில் சிக்கி உயிரிழந்தாரா?, அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி ஆசிரியரின் திடீர் மரணம் அப்பகுதியில் பொரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web