தவெக கல்வி விருது விழா.. பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

 
TVK TVK

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்படும் 2-ம் ஆண்டு கல்வி விருது விழாவிற்கான பாஸ் வழங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வரும் அவர், சமீபத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, அவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் விஜய். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

TVK

இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு முதல் முறையாக மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார் விஜய். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழங்க இருக்கிறார்.

இந்த கல்வி விருது விழா, வரும் ஜூன் 28 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சென்னையில் நடைபெற உள்ளதாக தவெக சார்பில் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா ஜூன் 28-ல் நடைபெறுகிறது.

TVK

இதில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து ஊக்கத்தொகை மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கி கௌரவிக்க உள்ளார். இந்நிலையில் விழாவில் பங்கேற்கும் மாணவ மாணவியருக்கான பெற்றோர்கள் புகைப்படம் அடங்கிய பாஸ் விநியோகம் என்பது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக உள்ள நிர்வாகிகளை அழைத்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கியுள்ளார்.

From around the web