தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது.. தியேட்டரில் வைத்து கொச்சி போலீஸ் செய்த சம்பவம்

 
TamilRockers

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றம் செய்த ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடுவது பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. அந்த வகையில் எந்த படமாக இருந்தாலும் திரைக்கு வந்த முதல் நாளே அந்த படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தமிழ் ராக்கர்ஸ். இதன் அட்மினாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்.

இது போல் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யும் படங்களை பலர் இணையத்தில் டவுன்லோடு செய்து பார்த்துவிடுவதால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் குறைந்து இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இதை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என திரைத்துறையினர் போராடி வந்தனர்.

Tamil rockers

விசிடி இருந்த காலகட்டத்தில் நடிகர் விஷால் கூட இது போல் திருட்டு விசிடி தயாரிக்கும் கடைகள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டால் உடனே அந்த கடைக்கு செல்லும் விஷால், அந்த நபரை சரமாரியாக கேள்விகளை கேட்டு போலீஸில் ஒப்படைத்துவிடுவார். ஆயினும் இது போன்ற திருட்டுத்தனங்கள் நடந்து கொண்டுதான் இருந்தது.

இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் நடித்த குருவாயூர் அம்பல நடையில் என்ற மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் கொச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

Kerala-youth-arrested-for-molesting-female-doctor

அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் ஒரு தியேட்டரில் புதிய படத்தை பதிவு செய்து கொண்டிருந்த போது போலீசார் அவரை பிடித்தனர்.

அது மட்டுமல்லாமல் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணயில் திரையரங்குகளின் இருக்கைகளில் சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்தது தெரியவந்தது. மேலும் இணையத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய ரூ 5,000 கமிஷனாக ஸ்டீபன் ராஜ் பெற்றதும் தெரியவந்தது. அது போல் அவர் ஒன்றரை ஆண்டுகளாக இது போல் திருட்டுத்தனம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web