தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி அறிமுகம்.. காலை 9.15 மணிக்கு கொடியேற்றுகிறார் விஜய்!

 
tvk

சென்னை பனையூரில் இன்று நடைபெறும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுக செய்யும் விஜய், கொடி பாடலையும் வெளியிடவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், கடந்த பல ஆண்டுகளாகவே அரசியல் ஆர்வத்தில் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம்  நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார். மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். 

TVK

இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.

இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார். இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.


பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.

From around the web