தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. யாருக்கு எவ்வளவு போனஸ்?

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு போனஸும் அறிவிக்கப்படும். தமிழ்நாடு அரசு சார்பிலும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை (one trillion economy) நோக்கி பயணிக்கிறது.
தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படவுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8 புள்ளி 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாய் கருணைத்தொகை வழங்கப்படும். இதனால், குறைந்தபட்சமாக 8,400 ரூபாயும், அதிகபட்சமாக 16,800 ரூபாயும் போனஸாக வழங்கப்படும். 2,75,670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்பட உள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போனஸ் குறித்து தனியே அறிவிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.