தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்? புதிய ஆளுநராகும் முன்னாள் ஒன்றிய அமைச்சர்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டு வருபவர் ஆர்.என்.ரவி. இவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மிஸ்ஸானது. இது சர்ச்சையை கிளப்பியது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆளுநர் ஆர்.என்.ரவியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ஆர்.என்.ரவி நாகலாந்தில் 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்தார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆளுநராக நீடித்து வருகிறார். இதற்கிடையே தான் நீண்டகாலமாக ஆளுநராக பொறுப்பு வகித்து வருபவர்களை மாற்றம் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கேரளா, ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்களை மாற்றம் செய்யும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ளதாம்.
அதன்படி விரைவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் விகே சிங்கை புதிய ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் இந்திய ராணுவ படை தலைவராக பொறுப்பு வகித்தார். ராணுவ ஜெனரலான இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு பாஜகவில் சேர்ந்தார்.
பாஜகவில் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் லோக்சபா தொகுதியில் 2014, 2019ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் மோடியின் முதல் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் விகே சிங் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். மேலும் விகே சிங்கிற்கும், தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒன்றிய அமைச்சராக பொறுப்பு வகித்தபோது பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது தமிழ்நாடு பாஜகவின் மேலிட தலைவராக விகே சிங் செயல்பட்டார். கடந்த 2023-ல் மதுரையில் முன்னாள் ராணுவத்தினர் மாநாில மாநாட்டில் விகே சிங் பங்கேற்று, தேசப்பற்று உள்ள ராணுவத்தினர் பாஜகவில் இருக்க வேண்டும் என்று பேசினார். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 4 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக விகே சிங் இருந்தார். சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு அவர் பொறுப்பாளராக செயல்பட்டார்.
இதனால் விகே சிங்கிற்கு தமிழ்நாடு அரசியல் களம், மக்களின் மனநிலை உள்ளிட்டவை ஓரளவுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இதனால் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்என் ரவிக்கு பதில் முன்னாள் ராணுவப்படை தலைவரான விகே சிங்கை தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமிக்கலாம் என்று ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.