தமிழ்நாடு அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்... ஆதார் எண் கட்டாயம்!! தமிழ்நாடு அரசு உத்தரவு

 
Aadhar

தமிழ்நாட்டில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு புதிய உத்தரவிட்டுள்ளது.

ஒன்றிய அரசு திட்டங்களின் பயனை அடைவதற்காக அதன் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை அந்த திட்டங்களில் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசும் தனது பல்வேறு திட்டங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம், மின்சார இணைப்பு உள்ளிட்ட பல திட்ட பலனை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்கி சமீபத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

child

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நலத் துறை சாா்பில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதிநிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், ஒன்றிய அரசின் விதிகள் படி, திட்டப்பயனாளிகளின் ஆதாா் இணைப்பு கட்டாயமாகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளிகள், ஆதாா் எண்ணை அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதாா் எண் பெறப்படாத நிலையில், ஆதாருக்கு பெற்றோா் மூலம் விண்ணப்பித்து, அதைக் கொண்டு திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்க வேண்டும். ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதாா் விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதாா் பெறுவதற்கான விண்ணப்ப நகல் இணைக்க வேண்டும். 

TN-Govt

அத்துடன், புகைப்படத்துடன் கூடிய வங்கிக்கணக்கு புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் சேமிப்புக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், வட்டாட்சியா் நிலையிலான அதிகாரியால் சான்றொப்பம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

From around the web