மேட்டூர் அருகே காணாமல் போன தமிழ்நாடு மீனவர் ஆற்றில் சடலமாக மீட்பு.. கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டில் பலி?

 
Fisherman Raja

மேட்டூர் அருகே காணாமல் போன மீனவரின் உடல் பாலாற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அருகே தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லை பகுதியில் பாலாறு செல்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேட்டூர் அடுத்த கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த ராஜா, இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி ஆகிய 3 பேரும் பரிசல் ஒன்றில் பாலாற்றில் மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் அவர்கள் மான் வேட்டைக்கு வந்துள்ளதாக கருதி அவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். இதனால், மீனவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில்  ராஜா என்பவர் மட்டும் திடீரென காணாமல் போனார். இதனால் அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனாலும் அவர் எங்கும் கிடைக்கவில்லை. 

gun

இந்நிலையில், ராஜாவின் சடலம் பாலாறு நீர் தேக்கப் பகுதியான காவிரி ஆற்றில் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று உறவினர்கள் பார்த்தபோது ராஜாவின் சடலம் மிதந்ததைக் கண்டு அவர்கள் கதறியழுதனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்களும் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க இரு மாநில எல்லையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா மாநில வனத்துறை அடையாளம் தெரியாத 4 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில், இருமாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த கர்நாடக வனத்துறையினர், வேட்டை கும்பலை சரணடைய செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

dead-body

ஆனால், வேட்டை கும்பல் வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் பதிலுக்கு மான் வேட்டையில் ஈடுபட்ட தமிழ்நாடு வேட்டை கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, வேட்டை கும்பல் மான் மற்றும் துப்பாக்கிகளை அங்கேயே போட்டுவிட்டு ஆற்றில் குதித்து தப்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் பரிசலில் இருந்த 2 மூட்டை மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றையும், பரிசலையும் பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் கர்நாடக வனத்துறை கூறியுள்ளது.

From around the web