முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கம்!
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவையொட்டி தமிழ்நாடு அரசின் தொல்லியல் சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இன்று ஜனவரி 5 முதல் ஜனவர் 7 வரை மூன்று நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இந்த கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த முன்னாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் அவர்களின் திருவுருச்சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், சிந்துவெளி வரிவடிவங்களும் மிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஒரு வடிவவியல் ஆய்வு என்ற நூலையும் வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாப் பேருரையாற்றவுள்ளார்.
மூன்று நாட்கள் நடக்கும் இந்த கருத்தர்ங்கத்தில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளிலிருந்து அறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr. கிரெக் ஜேமிசன் அவர்கள் சிந்துப் பண்பாட்டின் முத்திரைகள்: நடப்பு பார்வைகள் மற்றும் எதிர்கால இலக்குகள் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றுகிறார்.
வரலாற்று எழுத்தாளர் திரு. டோனி ஜோசப் அவர்கள் ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிப்பு: நூறுஆண்டுகளுக்குப் பிறகும் நிலவும் சில கேள்விகளும் சிக்கல்களும் என்ற தலைப்பிலும், அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேரா. நயன்ஜோத் லஹிரி அவர்கள் சிந்துவெளி நாகரிகம்: ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பினைத் திரும்பிப்பார்த்தல் என்ற தலைபிலும் தங்கள் ஆய்வுக் கருத்துரையாற்ற உள்ளார்கள்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் மதிப்புறு ஆலோசகர் பேரா. ராஜன் அவர்கள் சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு என்ற தலைப்பிலும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மைய ஆலோசகர் திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் சிந்துவெளிப் புதிர்களைப் புரிந்துகொள்ளுதல்: இருமொழி எழுத்துகள் இல்லாத நிலையில் என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்ற உள்ளனர்.
ஹரப்பா.காம் நிறுவனர் திரு. ஓமர் கான் அவர்கள் ஹரப்பா.காம்@30 என்ற தலைப்பிலும், ஐக்கிய ராச்சியம் (UK), டர்காம் பல்கலைக்கழகத் தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் கிறிஸ்டோபர் டேவிஸ் அவர்கள் மார்ஷல் மீதான புத்தொளி: சர் ஜான் மார்ஷல் அவர்களின் தொல்லியல் அணுகுமுறைகளை ஆராய்தல் என்ற தலைப்பிலும் கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 24 ஆய்வாளர்கள் தொல்லியலாளர்கள் சிந்துவெளி நாகரிகம் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தின் இதர நாகரிகங்கள், பண்பாடுகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் தங்களது ஆய்வுரைகளை வழங்கவுள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் பொதுமக்கள், மாணவர்கள் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் நேரலையில் ஒளிப்பரப்பப்பட உள்ளன