டீக்கடை, படிப்பகம் - தூத்துக்குடியில் மக்களுடன் ஒருவராக அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்!!
மினி டைடல் பூங்காவை திறந்து வைப்பதற்காக தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில்செயல்படுத்தப்பட்டு வரும் முத்திரைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், முதலமைச்சரின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வியூகம் பற்றி கட்சியினரிடம் விவரித்தார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பாளை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது விவிடி சிக்னல் அருகே உள்ள டீக்கடையில் நின்று கடைக்காரர்களிடம் நலம் விசாரித்தார். அங்கு பெண்களே டீ போட்டுக் கொடுத்தனர். அதை வாங்கி ருசித்த படி அரசுத் திட்டங்கள் வந்து சேர்கிறதா என்பது உள்ளிட்ட நடப்புகளை கேட்டறிந்தார்.
அங்கிருந்து புறப்பட்டவர் அடுத்ததாக வ.ஊ.சிதம்பரம் கல்லூரி அருகே அமைந்துள்ள மாநகராட்சி படிப்பகத்திற்குள் சென்றார். அங்கே மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அரசுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் உரையாடிய முதலமைச்சர், நன்றாகத் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேரவேண்டும் என்று வாழ்த்தினார்.
முதலமைச்சர் சென்ற வழியெங்கும் மக்கள் திரளாக வந்திருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், தங்களுக்கு உதவி கோரி மனுக்களையும் அளித்தனர். கலைஞர் வேடமிட்டு வந்த சிறுவன் முதலமைச்சரிடம் பாராட்டுக்களைப் பெற்றான். காரிலிருந்த முதலமைச்சர் அங்கு வந்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியூட்டினார்.
மக்களுடன் ஒருவராக வலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி மக்களை ஆச்சரியப்படுத்தி இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டார். முதலமைச்சருடன் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கனிமொழி எம்.பி. தூத்துக்குடி ஸ்பெஷலான மக்ரூன் கொடுத்து வரவேற்றார்.