தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. பதவி இழக்கும் அமைச்சர்கள் யார் யார்?
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 27 முதல் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்வர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களில் சீனியரான காந்தி மீது முதல்வருக்கு அதிருப்தி இருந்து வருகிறது. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து காந்தி நீக்கப்படக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை. அதேபோல அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோரது செயல்பாடுகளிலும் முதல்வர் ஸ்டாலின் திருப்தியை தெரிவிக்கவில்லையாம். இதனால் அமைச்சர்கள் காந்தி, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய மூவரும் பதவி இழக்க நேரிடுமாம்.
இந்த மூவருக்கு பதில் 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் செஞ்சி மஸ்தானை நீக்கிவிட்டால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஆவடி நாசரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கவும் வாய்ப்பிருக்கிறதாம். கோவி செழியன் மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் புதியதாக இணைக்கப்படவும் கூடும் என்கின்றன தகவல்கள்.