பதவி விலகுகிறாரா தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்? அதிமுக உட்கட்சிக் குழப்பத்தில் பாஜகவுக்கு புது சிக்கல்கள்?
தன்னுடைய பதவி பறிபோகக் காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையனை தூண்டி விடுகிறார் அண்ணாமலை என்று பரவலாகப் பேசப்படும் நிலையில், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி என்றால் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வைத்தக் கோரிக்கையை ஏற்று அவரை நீக்கிவிட்டு நயினார் நாகேந்திரனை நியமித்தது பாஜக மேலிடம். நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதோடு, எதிராகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று நயினார் நாகேந்திரன் கூறினார். அண்ணாமலையும் வேறு வழியில்லாமல் அதையே வழி மொழிந்தார். ஆனால் திரை மறைவில் நடந்த வேலையோ என்னவோ, ஓ.பி.எஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். டிடிவி தினகரனும் விலகினார். அதிமுகவுக்கு உள்ளேயே செங்கோட்டையனும் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்த மூவருக்குப் பின்னாலும் அண்ணாமலை தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ”அதிமுகவை பாஜ உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு அளவில் கூட்டணிக்கு தலைவராக ஏற்று இருக்கிறோம். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக சொல்லி இருக்கிறார். எனக்கு அதைப் பற்றி முழுமையாக தெரியாது. கூட்டணிக்கு வருவதற்கு ஓ.பி.எஸ். எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கக்கூடாது என்பது டிடிவி தினகரனின் சொந்தக் கருத்து.
ஓபிஎஸ்சிடம் எந்த நேரமும் பேச தயாராக உள்ளேன். யார் மீதும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ்சிடம் கண்டிப்பாக பேசுவேன். செங்கோட்டையன் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்ததால், எங்கள் கூட்டணிக்குள் எந்த வித இடர்பாடும் இல்லை. விஜய் சனிக்கிழமை பிரசாரம் செய்வது என்பதில் சனிக்கிழமை குறித்து உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நான் எதுவும் சொல்ல வேண்டாம். நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் என் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள். கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி என்ன சொல்கிறாரோ அதுதான் நிலைப்பாடு. இங்கு பிளவு என்பது கிடையாது' என்றார்.
மேலும், “முதல்வர் வேட்பாளராக எடப்பாடி இருந்தால் கூட்டணி வெற்றிபெறாது என டிடிவி கூறியிருக்கிறார். அவர் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு முன், உள்துறை அமைச்சர் யாரை முதலமைச்சர் ஆக சொல்கிறாரோ அவரை நாங்கள் ஏற்போம். பிரசாரம் செய்வோம் என்றார். அதன் பிறகு கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார் என்றும் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
