தமிழ்நாடு தன்னுரிமை கழகம்... வரும் 5-ம் தேதி புதிய கட்சியை தொடங்குகிறார் சர்கார் வில்லன் பழ.கருப்பையா!!

வரும் பிப்ரவரி 5-ம் தேதி ‘தமிழ்நாடு தன்னுரிமை கழகம்’ என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர் சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா. இவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து செயல்பட்டார். இதையடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டார்.
சமீபகாலமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் செயல்படாமல் இருந்தது. இதுபற்றி கேட்டபோது நான் கட்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் பழ கருப்பையா இருந்தார்.
இந்நிலையில், ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை பழ. கருப்பையா தொடங்குகிறார். இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பல கருப்பையா பேட்டியளித்தார். அப்போது அவர் புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது, புதிய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் ஒரு கட்டாயமாக உருவெடுத்திருக்கிறது. நேர்மை, எளிமை, செம்மை. அறம் சார்ந்த அரசியல். முக்கியக் கொள்கை என்பதே இக்கழகத்தின் முதல் கொள்கை.
சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூகம் சார்ந்ததாக மாற்றுவது எமது முக்கிய கொள்கை. அரசியல் என்பது ஒரு வணிகமாக ஆகிவிட்ட நிலையை மாற்றி அமைப்பதற்கான முயற்சி இது. இதற்காக நாங்கள் சில ஆயிரம் பேர் இணைந்து ஒரு கட்சியை தொடங்க இருக்கின்றோம்.
ராயப்பேட்டை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) எமது கழகத்தின் தொண்டர்களுடைய மாநாடு நடக்க இருக்கிறது. அந்த மாநாடு தொண்டர்களுக்கு மட்டுமே உரிய மாநாடு. ஏற்கனவே 3, 4 நாட்களாக எமது கழகத்தில் சேர்கின்ற மற்றும் அந்த நிகழ்வின்போது சேர இருக்கின்றவர்களுக்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கின்றோம் என்று கூறினார்.