தமிழ் என்றால் கசப்பு.. தமிழர்கள் என்றால் வெறுப்பு.. ஒன்றிய பாஜக அரசு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!!

 
keezhadi protest keezhadi protest

தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் நிரூபிக்காத பாஜக அரசு,கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்ப் பண்பாட்டின் மீது அப்பட்டமான தாக்குதல் நடத்தியுள்ளாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கீழடி தமிழர் தாய்மடி என்ற முழக்கத்துடன் திமுக மாணவரணியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டணி கட்சிகள் மற்றும் திமுகவினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவரங்களை எடுத்துரைத்துள்ளார்.

”தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு புறக்கணித்து திருப்பி அனுப்பியதற்கான எதிர்வினைதான் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் .

கீழடியில் நடந்த அகழாய்வுகள், தமிழர்களின் நாகரிகம் தனித்துவமான நாகரிகம் என்பதையும், தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது என்பதையும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்த அகழாய்வாகும்.மறைந்த முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர், கடந்த 2016-ம் ஆண்டு, ‘ஹரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்துக்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும்’ என்று சமூக வலைதளம் வாயிலாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவர் எச்சரித்தது போலேவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய மத்திய பாஜக அரசு, கீழடி அகழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்திய தொல்லியல் துறையால் வைகை ஆற்றங்கரையில் தள ஆய்வு நடத்தப்பட்டு, கீழடி ஒரு முக்கிய குடியிருப்புத் தளம் என அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அகழாய்வு தொடர்ந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 3 கட்டங்களோடு கீழடி அகழாய்வை நிறுத்திக் கொண்டது. இதனால், மீதமிருந்த 7 கட்டங்களையும் தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டது.

கீழடி அகழாய்வின் வாயிலாகத் தமிழர்களின் வைகை ஆற்று நாகரிகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகள் முதல் 3000 ஆண்டுகள் வரை பழமையானது என்பது தெளிவாகிறது. இது வெறும் கருத்துரீதியான தகவல் அல்ல. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களை வகைப்படுத்தி உள்நாட்டிலும், உலகளவிலும் உள்ள சிறந்த ஆய்வுக்கூடங்களான புனே, பெங்களூரு, அமெரிக்காவின் புளோரிடா மற்றும் இத்தாலி ஆகியவற்றுக்கு அனுப்பி அங்கு ராயல் டெஸ்டிங், கெமிக்கல் டெஸ்டிங், கார்பன் டேட்டிங் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அறிவியல்பூர்வமாக முடிவுகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையிலேயே 2023-ம் ஆண்டு 982 பக்க இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்தார்.

ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடாமல் காலம்தாழ்த்தி, தமிழரின் பண்பாட்டுப் பெருமையை மறைக்க நினைக்கும் மத்திய அரசு, கூடுதல் சான்றுகள் தேவை என்று திருப்பி அனுப்பியிருக்கிறது. இது தமிழ்ப் பண்பாட்டின் மீதான பாஜக அரசின் அப்பட்டமான தாக்குதல்.

தரவுகள் எதுவுமில்லாத கற்பனையான சரஸ்வதி நாகரிகத்தை எந்தவித அறிவியல் சோதனைகள் மூலமாகவும் பாஜக நிரூபிக்கவில்லை. ஆனால், கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் ஒவ்வொன்றும் உலகத் தரத்திலான அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டும்கூட, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஏற்க மனம் வரவில்லை.

அகழாய்வுகள் நடத்தப்பட்டபோது அதிமுக ஆட்சி நடைபெற்றது. ஆனால், கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் மத்திய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை.

தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழ்மொழி இந்திய அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இருக்கிறது. தமிழர்கள் இந்திய குடிமக்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்குரிய இரும்பின் தொன்மை முடிவுகள் குறித்து ஒரு ‘ட்வீட்’ போடக்கூட பிரதமர் தொடங்கி பாஜக ஆட்சியினருக்கு மனம் வரவில்லை.

தமிழ்நாடு பாஜகவினரும் தங்கள் இன - மொழி உணர்வை பதவிக்காகத் தலைமையிடம் விற்றுவிட்டு, தமிழர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார்கள். கீழடியிலும் சென்னையிலும் ஒலித்திருப்பது முதல்கட்ட முழக்கம். இது டெல்லி வரை தொடர்ந்து எதிரொலிக்கும். தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை திமுகவின் போராட்டம் ஓயாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

From around the web