மாநில சுயாட்சிக் குரல்களுக்கெல்லாம் ஊக்கம் தரும் சின்னங்கள்!!

 
Kalaignar

எம்புரான் என்ற படம். ஆட்டுப் புழுக்கை போல மாதம் ஒன்று வெளிவரும் அக்‌ஷய் குமாரின் படங்கள், காஷ்மீர் ஃபைல்ஸ், ச்சாவா, கேரளா ஃபைல்ஸ் போன்ற சங்கிப் படங்களில் செய்வதைப் போல யாரையும் கற்பனையாக, பொய்யாக அந்தப் படம் வில்லனாகச் சித்தரிக்கவில்லை. நிஜ சம்பவத்தை (இத்தனைக்கும் அந்த சம்பவத்தை செய்தவனே வீடியோவில் ஒப்புக்கொண்ட சம்பவம் அது) அப்படியே காட்டியதற்கு மிரட்டி 17 இடங்களில் கட் செய்ய வைத்தார்கள். அத்துடன் விடவில்லை. தயாரிப்பாளர் மீது வளர்ப்புப் பிராணியை ஏவி விட்டார்கள்.

அப்படியே பிரித்விராஜ் மீதும். இதே நேரத்தில், எக்நாத் ஷிண்டேவை வைத்து காமடி செய்த குனால் காம்ரா மீதும் அதிகாரம் ஏவப்படுகிறது. இத்தனைக்கும் அவர் ஒன்றும் ‘மூத்து பத்திரிக்கையாளர்’ என்ற பெயரில் YouTubeல் உட்கார்ந்து கொண்டு பெண்களை, துப்புரவுத் தொழிலாளர்களை எல்லாம் துப்புகெட்டத்தனமாக அவதூறு பேசும் முப்பதாம் தர ஆள் அல்ல. ஆனால், அவர் நிகழ்ச்சிகளை bookmyshow போன்ற பிரபல ஆப்ஸில் இருந்தெல்லாம் தூக்குகிறார்கள். ஊடக செய்தி என்ன தெரியுமா? பிரித்விராஜுக்கு பிரச்சினை! குனாம் காம்ராவுக்கு பெரிய பிரச்சினை! எப்புடி? பிரச்சினை அவர்களுக்கா இந்திய ஜனநாயகத்திற்கா? பிரச்சினை அவர்களுக்கா இந்தியாவின் பேச்சுரிமைக்கா?

அப்படியே இந்தப் பக்கம் வருவோம். நான்தான் மாஸு நான் அடிச்சா பீஸு என ஒரு நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார். பாஜகவை கொள்கை எதிரி என அறிவிக்கிறார். பல பேர் பல நாள் கிண்டல் செய்ததால் கடைசியே கடைசியாக மோடி என்ற பெயரையும் உச்சரிக்கிறார். ஆனால் எந்தப் பிராணியும் அவர் மேல் ஏவப்படவில்லை. ஏன் தெரியுமா? அந்தப் பிராணி ஏற்கெனவே ஏவப்பட்டதால்தான் அவர் கட்சியே ஆரம்பித்திருக்கிறார்! அட்டகாசம் படத்தில் அஜித் சொல்லுவாரே, எல்லா ரவுடிக்கும் ஒரே ஃப்ளாஷ்பேக் தான் அண்ணாச்சி என்று.

அதுபோல் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இதே கதைதான், இதே ஃபார்முலதான்! சரி அவரே, மோடிஜீ மோடிஜீ என கெஞ்சிய தன் பேச்சில் ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் தந்தார். “ஜீ பல பேருக்கு தண்ணி காட்டிய மாநிலம் தமிழ்நாடு ஜீ” என்று. ‘தண்ணி காட்டிய’ என்ற இந்த விஷயத்திற்கு வருவோம். யார் டெல்லிக்குத் தண்ணி காட்டினார்கள்? ராஜாஜியா? அப்படிச் சொன்னால் ராஜாஜி ஆவியே சிரிக்கும். காமராசரா? நல்ல முதல்வர்தான். கர்மவீரர் தான். ஆனால் தேசியக் கட்சி என்பதால் டெல்லிக்கு விசுவாசமான முதல்வர். தமிழ்நாடு என பெயர் சூட்டக்கூட மறுத்தவர். சரி, எம்.ஜி.ஆரா? செம வீராதி வீரர்!

ஆனால் சினிமாவில்! இந்திரா காந்தி மிசா போட்டது எல்லாருக்கும் தெரியும். ஆனால் மிசாவை ஆதரித்து தீர்மானம் போட்ட ஒரே இந்திய அரசியல்வாதி யார் தெரியுமா? எம்.ஜி.ஆர்! விடுதலைப்புலிகளுக்கு இந்திரா உதவிய போது தானும் உதவினார். ராஜீவ் எதிரி ஆனபோது புலிகளைத் தானும் கைவிட்டார். டெல்லி எவ்வழி, எம்.ஜி.ஆர் அவ்வழி! சரி, ஜெயலலிதா? பாவம் வழக்கு நடந்ததே! அதனால் ராமர் கோவில் கட்ட கரசேவைக்கு ஆள் அனுப்பி டெல்லிக்கு தன் விசுவாசத்தைக் காட்டினார். ஆடு கோழி பலி இடக்கூடாது என்றெல்லாம் சட்டம் போட்டார். சரி, வேறு யார்தான் காட்டினார்கள்? வேறு யார்? அண்ணா, கலைஞர், இன்று தளபதி ஸ்டாலின்!

அண்ணா ராஜ்யசபையில் இந்திக்கு எதிராக, இந்தி ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முழங்கினார். தன் ஆட்சியில் மும்மொழிக் கொள்கையைக் கொன்று இருமொழிக்கொள்கையைக் கொண்டு வந்தார். கலைஞர் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பஞ்சாபில் நடந்த மாநில சுயாட்சி மாநாடுகளில் எல்லாம் கலந்து கொண்டார். தமிழ்நாட்டுக்குக் கொடியை அறிமுகம் செய்தார். மிசாவை தனி ஒரு ஆளாய் எதிர்த்தார். ஆட்சியை இழந்தார். காமராசரின் பாராட்டையும் பெற்றார்.

நேரு மகளே வருக என சுவற்றில் எழுதியதைதான் பலர் சொல்வார்கள், ஆனால் இந்திராவை சீரணி அரங்கத்தில் வைத்து மிசாவுக்காக வருத்தம் தெரிவிக்க வைத்ததும் கலைஞர் தான். ஈழத்துக்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக இருந்தபோது அமைதிப்படையை வரவேற்கச் செல்லாமல் ப்ரோட்டோகாலை மீறினார். ஆட்சியை மீண்டும் இழந்தார்.

வாஜ்பாய்யின் பாஜவுடன் கூட்டணி வைத்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் அவர்களைக் கையெழுத்துபோட வைத்து டெல்லியின் லகானை தன் கையிலேயே வைத்திருந்தார். பாஜக ஆட்சி இப்போதைய மோடி ஆட்சி போல RSS ஆட்சியாக இல்லாமல் ‘கை-கால் ஒடிந்த’ பாஜக ஆட்சியாக இருந்ததற்குக் காரணம் கலைஞர்.

இன்றைக்கும் அண்ணாவும், கலைஞரும் வங்காளம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஒலிக்கும் மாநில சுயாட்சிக் குரல்களுக்கெல்லாம் ஊக்கம் தரும் சின்னங்களாக விளங்குகிறார்கள்! தளபதி ஸ்டாலின்! அண்ணா, கலைஞர் சண்டைபோட்டது கூட மனிதர்களுடன்! ஆனால் தளபதி சண்டை போடுவது, மனிதாபிமானம், இரக்கம், ஜனநாயகம், அரசியலமைப்பு மீது மரியாதை என எதுவுமே இல்லாத முற்றும் துறந்த பிறவிகளுடன்! இந்தச் சண்டை பற்றி உங்களுக்கே தெரியும்!

- டான் அசோக்

From around the web