நாமக்கல் அரசுப் பள்ளிக்கு திடீர் விசிட்... மாணவர்களுடன் பிரேக் பாஸ்ட் சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

 
Udhayanidhi

நாமக்கல்லில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் ‘காலை சிற்றுண்டி திட்டம்’ மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் அழகு நகரில் உள்ள தொடக்கப் பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார். அவருடன் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோரும் காலை உணவு சாப்பிட்டனர்.

Udhayanidhi

பின்னர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தங்கள் நோட்டுகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆட்டோகிராஃபை கேட்ட மாணவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டார். மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நாமக்கல் மாவட்டம் அழகு நகர் பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை இன்று ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் உணவருந்தி, உணவு தரமாகவும் சுவையாகவும் வழங்கப்படுவதை உறுதிசெய்து, இத்திட்டத்தால் அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தோம்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று ஆய்வின்போது, வகுப்பறைக்கு சென்று அரசின் சொத்தாக திகழும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. அவர்களுக்கு என் அன்பை தெரிவித்து மகிழ்ந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web