வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை.. விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் விபரீத முடிவு!!

 
Tiruvallur

திருவாலங்காடு விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் செல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது இளைய மகன் திலீப் (19). இவர் திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சி புண்டரீகபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இக்கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். மாணவன் திலீப்பும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவன் திலீப், வயிற்று வலி இருப்பதாக ஆசிரியர்களிடம் கூறி பாதியில் விடுதிக்கு திரும்பி உள்ளார். கல்லூரிக்குச் சென்ற மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் விடுதிக்கு வந்து பார்த்தபோது, திலீப் தங்கியிருந்த அறையின் கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது. 

Suicide

அவருடன் அதே அறையில் தங்கியிருக்கும் மாணவர்கள் நெடுநேரமாக அறை திறக்காமல் உள்ளதால் கல்லூரி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அறையின் கதவை உடைத்து பார்த்தபோது திலீப் தூக்கிட்ட நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவன் திலீப்பை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Thiruvalangadu PS

தகவல் அறிந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவன் திலீப் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே இந்தக் கல்லூரியில் விருப்பமில்லாமல் பயின்று வந்ததும், அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. 

மேலும் இச்சம்பவம் குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரியில் சேர்ந்து 5 மாதத்தில் விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web