மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. அண்ணாமலை மீது குற்றம் சாட்டும் அதிமுக?

 
kishore swamy kishore swamy

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விரைவாக முடிக்கப்பட்டு குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் எந்த சலுகையும் இல்லாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சீக்கிரமாக வழக்கை முடித்து எந்த சாரை காப்பாற்றுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலையின் வீடியோவில் உள்ள தகவல்கள் பிழையானவை என்று ஊடகவியலாளர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அதிமுகவைச் சார்ந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நிர்வாகியாகவும் உள்ள கிஷோர் கே.சுவாமி அண்ணாமலை நோக்கி பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

”என்னிடம் CDR உள்ளதுஎன்று பாரதிய ஜனதா கட்சியின் பிரபல யூ டியூபர் அண்ணாமலை கூறி 4 மாதங்கள் ஆகின்றன. ஒருவேளை இப்படி ஒன்று என்னிடம் இருந்திருந்தால் நான் நீதிமன்றத்தை அணுகி போடப்பட்ட குற்றப்பத்திரிக்கை தவறு என்றும் இது சரியாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரி இருப்பேன். உயர்நீதிமன்றம் ஏன் உச்சநீதிமன்றத்தை கூட அணுகி இருப்பேன்.

என்னிடம் உள்ள சிடிஆர் அதற்கு ஆதாரமாக மாறி இருக்கும். என்னிடம் உண்மையான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் கூடுதலாக தேவை. என்னிடம் தகவல் உள்ளது அதில் அரசியல்வாதிகளாகிய சண்முகம், நடராஜன், மாசு பெயரை வெளியிடுவேன் ஆனால் சம்பந்தப்பட்ட, உடனடியாக அவனுக்கு உதவி செய்த அதிகாரியின் மற்றும் அதிகாரிகளின் பெயர்களை தற்போது வெளியிட மாட்டேன் என்பதும் இன்னும் 48 மணிநேரம் கழித்து வெளியிடுவேன் என்றும் அண்ணாமலை கூறக்காரணம் என்ன??

திமுகவின் பல அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்தது போல சில காவல்துறை அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியா இது என்ற கேள்வி எழுகிறது. அதையும் மீறி ஒரு வாய்ப்பு என்றால் அது தனது கும்பலாகிய காவல்துறையினரை காப்பாற்ற இருக்கலாம் மாறாக முன்னர் கூறியது போல அவர்களிடம் இருந்து பணம் பறிக்கவும் இருக்கலாம். இந்த தகவல்களுடன் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி இருந்தால் உண்மையான நீதி கிடைத்திருக்கும். அது நடக்காமல் தடுத்த குற்றம் அண்ணாமலையை சேரும்.

அடுத்தாக, இதை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசாமல் வீடியோ வெளியிட வேண்டிய அவசியம் என்ன?! மேலே சொன்ன கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் கேட்டால் பதில் சொல்ல முடியாது என்பதாலா? இதை உங்களது தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மூலமாக வெளியுலகிற்கு சொல்லி இருந்தால் கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்குமே என்பது அடுத்த கேள்வி? ஏன் செய்யவில்லை என்பதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்.

ஒன்று நயினார் மீது நம்பிக்கை இல்லை என ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது நயினாருக்கு மேலாக தன்னை காட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் தான் இப்படி செய்தேன் என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும். இதையே மறைமுகமாக கூற வேண்டும் என்றால் தன்னிடம் CDR இருப்பதாக கூறி அவர்களிடம் பணம் பறித்தபோது அண்ணாமலை தமிழக தலைவர் என்பதால் அப்போது இந்த தகவல்களை வெளியிடாமல், அந்த காலக்கட்டத்தில் சில திமுகவினரை காப்பாற்ற முடிவு செய்து (எல்லாம் பணம் தான்) தற்போது தமிழக பாஜக தலைமையில் இருந்து அண்ணாமலையை தூக்கி அடித்த பின்னர் அடுத்து காவல்துறையினரிடையே தனது வசூல் வேட்டையை அண்ணாமலை துவங்க இந்த வீடியோ அவசியமாகிறது. இப்போது தெரிகிறதா ஏன் இந்த திடீர் காணொளி என்று?” என்று அதிமுகவைச் சார்ந்த கிஷோர் கே சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவினரும் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், கிஷோர் கே.சுவாமியின் இந்த அறிக்கை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

From around the web