கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்ற மாணவர் பலி! தலைமை ஆசிரியர் பணிநீக்கம்!!

கம்ப்யூட்டர் பயிற்சிக்காக பள்ளிக்கு சென்ற மாணவன் மீது மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அருகே பொய்யாவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார் மாணவர் சக்தி சோமையா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பத்தரசன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கைலாசம் என்பவருடைய மகன் ஆவார்.
சம்பவத்தன்று, பள்ளிக்கு கம்ப்யூட்டர் பயிற்சிக்காகச் சென்றுள்ளார்.கம்ப்யூட்டரை இயக்குவதற்காக சுவிட்சைத் தொட்ட போது மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசனை, பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து பாலுமுத்து உத்தரவிட்டார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் அஜாக்கிரதையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பலியான மாணவனின் குடும்பத்திற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.