ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி.. கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்கச் சென்றபோது சோகம்!
சென்னை எண்ணூரில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய மாணவன் கால் தவறி தண்டவாளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை எண்ணூர் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது நாசர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முஹம்மது நபில் (17). இவர், 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்வதற்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் விண்ணப்பம் வாங்குவதற்காக, இன்று காலை நபில் வீட்டிலிருந்து கிளம்பி எண்ணூர் ரயில் நிலையம் வந்துள்ளார். பொன்னேரி செல்லும் ரயிலில் தவறுதலாக ஏறிய மாணவன் நபில், அந்த ரயில் ஆவடியில் நிற்காது என்பதை கேள்விப்பட்டு உடனடியாக ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் உயிரிழந்த மாணவன் முஹம்மது நபில் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் விண்ணப்பம் வாங்க சென்ற மாணவன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.