தலைமை ஆசிரியர் அடித்து கண்பார்வை இழந்த மாணவி.. DSP அலுவலகத்தில் பெற்றோர் புகார்.. தலைவாசல் அருகே பரபரப்பு!
தலைவாசல் அருகே தலைமை ஆசிரியர் அடித்ததில் பள்ளி மாணவி கண்பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் கங்கையம்மாள் (10). இவர் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி பள்ளி வகுப்பறையில் இருந்த போது பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமுருகவேள் பாடம் நடத்தியுள்ளார்.
பின் மாணவிகளிடம் பாடம் நடத்தியது குறித்து தலைமை ஆசிரியர் திருமுருகவேள் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது மாணவி கங்கையம்மாளுக்கு அருகில் இருந்த மாணவியை அடிப்பதற்காகக் குச்சியைத் தூக்கி திருமுருகவேள் வீசி உள்ளார். அந்தக் குச்சி கங்கையம்மாளின் இடது கண் மீது விழுந்துள்ளது. இதில் மாணவி அலறி துடித்துள்ளார்.
இதனையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தலைவாசல் வட்டார அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் கண் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது மாணவி 95 சதவீதம் கண்பார்வை இழந்துள்ளதாகத் தெரியவந்தது.
இதைக்கேட்டுக் அதிர்ச்சி அடைந்த கங்கையம்மாளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ் மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆத்தூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், அவர் மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது தொடர்பாகத் தலைமை ஆசிரியர் திருமுருகவேளிடம் கூறுகையில், “தெரியாமல் தவறு நடந்து விட்டது. மாணவியின் மருத்துவச் செலவுகளைக் கவனித்து வருகிறேன். யாரோ ஒருவரின் தூண்டுதல் பேரில் புகார் மனு அளித்துள்ளனர்” என்றார்.